என்ற தலைப்பில் இந்த இனைய தளத்திற்கு அன்பு தோழி நித்யஸ்ரீ அவர்கள் இந்த கவிதையை அனுப்பி இருக்கிறார்கள். வாசகர்கள் படித்து பார்த்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
மேலும் என் அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக,
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று.
நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தியாயிற்று.
பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று.
பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று.
மரங்களை இழந்த பறவைகளும்
இயற்கையை இழந்த மனிதனும்
தங்களது மொழியினை மறந்தபடி
காலத்தின் வேகத்துக்கு
அடிபணிந்து அன்னத்திற்காக
பறந்து கொண்டிருக்கின்றனர்
மவுனத்தைச் சுமந்தபடி.
என்றும் அன்புடன்
நித்யஸ்ரீ
No comments:
Post a Comment