Saturday, December 4, 2010

உன்னோடு நான் ...!



உன்னோடு காலம் 
முழுவதும் நான் வாழ்ந்திட 
நாள் தவறாது கனவுகாண்கிறேன் ...
உன் தோளோடு தோள் சேர்த்து 
நடந்திட நித்தமும் நினைக்கிறேன் ...
உன்னை என்றும் 
என் கண்ணின் மணியாய்
காத்திட நிழலை கூட நேசிக்கிறேன் ... 
உன் வாழ்க்கைத் 
துணையாகிட வேண்டி 
மனதில் தினமும் வேண்டுகிறேன் ... 
உன் அரியணையில் 
அரசி என்னும் சேவகியாய் 
வீற்றிருக்க நினைத்திருப்பேன் ... 
உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக 
நான் மாறி விழித்திருப்பேன் ...
ஒரு காவியமாகவே உன்னுள் 
கலந்திட சித்திரமாய் நின்றிருப்பேன் ...
உன் கனவிலும் நானே வந்து 
உன்னை தழுவிட 
காதல் தாளம் போட்டிருப்பேன் ...
உன்னோடு நான் இணைந்து 
உயிராக கலந்திருப்பேன்...!!
=====================================================================


உன்னோடு காலம் முழுவதும் 
நான் வாழ்ந்திட நினைத்தேன்... 
ஏனோ கால் நிமிடம் கூட 
நீ என் அருகில் இல்லை! 


உன் தோளோடு தோள் சேர்த்து 
நடந்திட நினைத்தேன்... 
ஏனோ உன் கால்போன சுவடுகூட 
கண்ணில் தென்படவில்லை! 


உன்னை கண்ணின் மணியாக 
காத்திட நினைத்தேன்... 
ஏனோ, இமை உதிர்க்கும் 
ரோமமாகக் கூட 
நீ என்னை கருதியதில்லை!


உன் வாழ்க்கைத் 
துணையாகிட வேண்டி 
மனதில் தினமும் நினைத்தேன்... 
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட 
நீ என்னை அழைத்திடவில்லை! 


உன் அரியணையில் அரசியாகவே 
வீற்றிருக்க நினைத்திருந்தேன்... 
ஏனோ, ஒரு சேவகியாகக் கூட 
நீ என்னை அனுமதிக்கவில்லை! 


உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக 
நான் மாறிட நினைத்தேன்... 
ஏனோ, உன் பாதம் 
கழுவும், நீராகக் கூட 
நீ என்னை பாவிக்கவில்லை! 


உன் கழுத்தை 
அலங்கரிக்கும் ரோஜாவாக 
நான் மலர்ந்திட நினைத்தேன்... 
ஏனோ, உன் பாதம் மிதிக்கும் 
சருகாகக் கூட 
நீ என்னை தீண்டிடவில்லை! 


உன் முன் ஒரு சிகரமாகவே ஓங்கி 
நிமிர்ந்திட முயன்றேன்... 
ஏனோ, சிறு 
குன்றாகக் கூட வளராமல் 
உதிர்ந்து போனேன்! 


ஒரு காவியமாகவே உன்னுள் 
கலந்திட நினைத்தேன்... 
ஏனோ, ஒரு ஓவியமாகக் கூட 
உன் நின் நிலைக்காமல் 
கலைந்து போனேன்! 


உன் சரித்திர நாயகியாய் 
திகழ்ந்திட நான் 
வியூகம் வகுத்தேன்... 
ஏனோ, ஒரு சொல்லாகக் கூட 
ஏட்டில் இடம் பெறாது போனேன்! 


உன் கனவிலும் நானே வந்து 
உன்னை தழுவிட நினைத்தேன்... 
ஏனோ, உன் நினைவில் கூட 
சரியாக நில்லாமல் 
நழுவிப் போனேன்!

என்றும் அன்புடன்
நித்யஸ்ரீ 

No comments:

Post a Comment