Saturday, April 9, 2011

சரித்திரத்துயில்



அடங்கிப் போனேன் அறைக்குள்;
முடங்கிப் போனது உலகமென்று!
யார் யாரோ வருகிறார்கள்;
பழங்களுடன் என்னைப் பார்த்துச்செல்ல!
உலகம் இன்னும் இயங்குகிறத!
அட ஆச்சர்யம்!

நாடி நிற்கும் நேரம்கேட்டேன்;
சுழலமறுக்கும் முட்கள் பார்த்தேன்;
நாட்டம் அனைத்தும் செய்துமுடித்தேன்;
என்ஆட்டம்  முடியும் தருணமிது!
ஓடிய ஓட்டம் அர்த்தம்பெற!
யாம் பாடியபாட்டை மறந்திடவேண்டம்!

இதயத்துடிப்பை கூர்ந்து கேட்டேன்;
இன்னும் சிலநேரம் துடித்திடுமாம்!
இல்லறம் ஏதும் இருந்திருந்தால்,
மனைவி மடியில் உயிர்விடஆசை!
எந்தன் கொள்கைகளே மனைவியானதால்
அதன்மடியில் துயில்கொள்ள பெருமைகொள்கிறேன்.

உறக்கமில்லா இரவுகள் எத்தனைஎத்தனை!
கண்டவை எல்லாம் புரட்சிக்கனவுகள்!
இளமையில் தொடங்கிய போராட்டம்
முதுமை வந்தும் தொடர்கிறது!
எந்தன் கனவுகள் தொடக்கிய போராட்டம்
உலகியக்கம் வரை நீண்டுசெல்லும்!

அடிமைக்கால ஆசைகள் எல்லாம்
எங்கே போனது தோழர்களே!
வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான் விரட்டியடித்தோம்!
அது நீண்ட போராட்டம்! இன்று
நம்மை நாமே சுரண்டும் கலாச்சாரம்
இதை எங்கே கற்றீர்கள்!

நாளும் வளர்கிறோம் என
கண்துடைக்கும் மனிதர்களே! வளர்ச்சியில்
விலையேற்றம், வறுமை, கல்வியின்மை
இவற்றிற்கும் பங்குண்டோ! சுரண்டல்
அனைத்தும் உங்கள் அழிவிற்கே!
அறிவீரோ! தர்மம் அழிந்ததில்லை!

நாளும் நிகழும் இனப்படுகொலைகள்,
மரணஓலங்கள், பெண்களின் கதறல்கள்
சப்தம் கேட்கிறதா! அரசியல்
எங்கும் மனிதம் இன்றி!
கடவுளே! எம் முன்னோர்களே!
மறுபிறவி அவதரியுங்கள் களையெடுக்க!

நம் வரலாற்றை படியுங்கள்!
எத்தனை போராட்டம்! எத்தனை
தியாகம்! எத்தனை புரட்சி! எத்தனை
கிளர்ச்சி! எத்தனை எழுச்சி! எத்தனை
மரணம்! எத்தனை கனவுகள்! எத்தனை
இலட்சியங்கள்! விடுதலை பெற!

முன்னோர் செயல்கள் காரணமன்றோ!
தியாகம் ஒன்றே! தன்னலம் கருத
களத்தில் மடிந்த கடவுள்கள்!
நம்பியது வரும் தலைமுறையை!
இன்றுஎங்கும் ஊழல், எதிலும் ஊழல்
தலைமுறைக்கும் சொத்து சேர்க்க!

என் நேரம் நெருங்கிவிட்டது!
முன்னோர் செயல்கள் பெருமைக்கல்ல!
தியாகம்! எதிர்பார்ப்பு அனைத்தும்
நாட்டின் வளமே! நாசமாக்கும்
நரகர்களே! நம் முன்னோர்கள்
ஆத்மாவிற்கு கடமைப் பட்டுள்ளோம்!

மறுபிறவி அவதரிப்பேன்!
ஒன்றுசேர காத்திருங்கள்!
புரட்சி ஒன்றை செய்திடுவோம்!
அஹிம்சையிலும் போரிடுவோம்! தேவையெனில்
உடல் சிதறக் கொன்றிடுவோம்!
மனக்கனலுடன் போராடுவோம் களையெடுக்க!
வேதனையில் கண் மூடுகிறேன்!

No comments:

Post a Comment